சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்களை பெற்று இருக்கும் படம் ஜெய்பீம்.
28 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவரின் லாக்கப் மரணம் தொடர்பான இந்தப்படம் காண்போரை கலங்கடித்தது எனக் கூறினால் மிகையாகாது.
இந்தப் படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சியில் காவல்துறை ஆய்வாளர் வீட்டில் வன்னியர்களின் புனித சின்னமான அக்னி கலசம் காலண்டரில் இருப்பது போன்று காட்சிபடுத்தப்பட்டிருக்கும். இந்த காட்சிக்கு சிலரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த காலண்டர் காட்சி தற்போது படத்தில் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இது திட்டமிட்டு வன்னியர்களுக்கு எதிராக அமைக்கப்பட்ட ஒரு காட்சி என்று திரௌவுபதி படத்தின் இயக்குனர் மோகன்ஜி உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஜெய் பீம் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அன்புள்ள நடிகர் சூர்யா அவர்களுக்கு வணக்கம் எனத் துவங்கும் அந்த கடிதத்தில்,
தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள் மத்தியில் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இது பேசு பொருளாக இருக்கும் நிலையில் சூர்யாவிடம் இருந்து அறமற்ற அமைதி நிலவுவதாகவும் எழுதியுள்ளார்.
மேலும் இத்திரைப்படத்தில் கொடூரமான மனநிலைமற்றும் மனித உரிமையை காலில் போட்டு மிதிக்கும் நபரான காவல்துறை ஆய்வாளரின் வீட்டில் வன்னியர்களை இழிவுபடுத்தும் நோக்கில் வன்மத்துடன் அக்னி கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம் பெற்று இருப்பதும், ராஜாக்கண்ணுவை கொலை செய்த காவல்துறை சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி எனத் தெரிந்தும் திரைப்படத்தில் கதாபாத்திரத்திற்கு குருமூர்த்தி என்ற பெயர் சூட்டி வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு அவர்களை நினைவு படுத்தும் வகையில் குரு என்று அழைப்பதும் கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் அவர்கள் சூர்யாவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் அன்புமணி ராமதாஸ் தனது கடிதத்தில் சூர்யாவிற்கு 9 கேள்விகளை முன்வைத்துள்ளார், அவை.
1. ஜெய்பீம் உண்மையாகவே உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தானா என வினவியுள்ளார்.
2. உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்றால் உண்மை நிகழ்வு நடந்த இடம் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்த முதனை கிராமமா அல்லது விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கோணமலை கிராமமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
3. உண்மை நிகழ்வில் முதன்மை கிராமத்தில் வாழ்ந்த பழங்குடி இனத்தை சேர்ந்த ராஜாக்கண்ணு என்ற இளைஞரை கம்மாபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் கொடூரமாக அடித்துக் கொலை செய்த காவல்துறை சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது சூர்யாவிற்கு தெரியுமா இந்த அடிப்படை உண்மை கூட தெரியாமல் ஜெய் பீம் திரைப் படத்தை உருவாக்கியிருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
4. ராஜாகண்ணுவை படுகொலை செய்த காவல்துறை அதிகாரியின் பெயர் அந்தோணிசாமி என்பதை அறிந்திருந்தும் கூட கொலையான பழங்குடி இளைஞருக்கு ராஜாக்கண்ணு, அவருக்காக போராடும் வழக்கறிஞருக்கு சந்துரு, விசாரணை அதிகாரியான காவல்துறை ஐ.ஜீ பெருமாள்சாமி என்று உண்மை நிகழ்வின் கதாபாத்திரங்கள் பெயரையே சூட்டிய சூர்யாவும், இத்திரைப்படத்தில் இயக்குனரும் சார்பு ஆய்வாளர் பாத்திரத்திற்கு மட்டும் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என பெயரிட்டது ஏன் எனவும் நீதிமன்ற விசாரணையில் அவரை குரு குரு என்று அழைக்கும் வகையில் காட்சி அமைத்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
5. காவல் நிலையத்தில் கொல்லப்பட்ட ராஜா கண்ணன் மனைவி பார்வதி இப்பொழுது சென்னையில் வசித்து வருகிறார்.அவர் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் தனது கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டத்தில் ஊராட்சித் தலைவரும் ஊர் மக்களுக்கு உறுதுணையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் அவர்கள் அனைவருமே வன்னியர்கள் அவ்வாறு இருக்கும்பொழுது திரைப்படத்தில் ஊர் மக்களையும் ஊராட்சி தலைவரையும் கெட்டவர்களாகவும் சாதிவெறி கொண்டவர்களாகவும் சித்தரித்தது ஏன் எனவும்,
6. கொடூர காவல் அதிகாரியாக நடித்து இருப்பவர் வீட்டில் தொலைபேசி காட்சியில் வன்னியர்களின் புனிதச் சின்னமாக அக்னி கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி வைக்கப் பட்டிருப்பது ஏன் எனவும்,
7. படைப்பாளிகளில் இருவகை உண்டு.ஒரு தரப்பினர் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இரண்டாவது தரப்பினர் திரைப்படத்தில் ஏதேனும் சர்ச்சையை எழுப்பி அதை பேசுபொருளாக அந்த விளம்பரத்தில் படத்தை ஓட வைக்க முயல்பவர்கள் இவற்றில் சூர்யாவை எந்த வகையில் சேர்ப்பது என்றும்,
8. ஜெய்பீம் என்றால் அம்பேத்கருக்கு வெற்றி, அம்பேத்கரியத்துக்கு வெற்றி என்று பொருள். அம்பேத்கர் எந்த சமுதாயத்தையும் இழிவு படுத்தவேண்டும் என்று கற்பிக்கவில்லை ஆனால் ஜெய்பீம் என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து நடித்துள்ள சூர்யாவும் அவரின் குழுவினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதை விட வன்னியர்களை இரவு படுத்துவதில் தான் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்கள். இதுதான் ஜெய்பீம் என்பதற்கு சூர்யா அறிந்து கொண்ட பொருளா என்று வினவியுள்ளார். இறுதியாக,
9. ராஜாக்கண்ணு இறப்பு குறித்து இருபத்தி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் சூர்யாவிற்கு தெரியவந்துள்ளது. ஆனால் ராஜா கண்ணு படுகொலைக்காக மற்ற கட்சிகளை இணைத்து முதல் போராட்டம் நடத்தியது பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் அய்யா அவர்கள் குறித்து சூர்யாவிற்கு தெரியாதா மொத்தம் சூர்யாவிற்கு 9 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
மேலும் கலைஞர்கள் என்பவர்கள் மக்களை மகிழ்விக்கத் தான் இருப்பதாகவும், சூர்யா அவர்கள் செய்திருப்பது வன்னியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது எனவும், வேண்டுமென்றால் சூரியா தான் சார்ந்த சமூகமான கவுண்டர் சமூகம் குறித்து படம் எடுத்து கொள்ளட்டும் என சற்று காட்டமாக அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.
சூர்யா தனது படைப்புகளுக்கு உண்மையாக இருப்பின் இந்த கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சூர்யாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கேள்விகளுக்கு சூர்யா தரப்பிலிருந்து விளக்கங்கள் ஏதேனும் வருமா?வரக்கூடிய பதில்கள் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Topics Related