உடல் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு சமீப காலங்களாக மக்களிடையே பரவலாக அதிகரித்து உள்ளது.
இம்மண்ணில் பிறந்த அனைவருமே ஒரு நாள் மாண்டு போகக்கூடியவர்கள் தான்.
ஆனால் நாம் இறந்த பிறகும் உடல் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்தால் நம்மால் பிறருக்கு உதவ முடியும்.அப்படி பிறருக்கு ஏதோ ஒரு வகையில் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இந்த உடல் தானம் /உடல் உறுப்பு தானம் குறித்து அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த இரண்டு வகை தானத்திற்கும் உள்ள வேறுபாட்டினை தெரிந்து கொண்ட பின் தன்னார்வலராக தாங்கள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
உடல் உறுப்பு தானம் (organ donation):
உடல் உறுப்பு தானம் என்பது ஒருவரின் இறப்பிற்குப் பின் அவர் உடம்பில் இருந்து பிறருக்கு பயன்படக்கூடிய உறுப்புகளை மட்டும் எடுத்து தானம் அளிப்பது. இவ்வழியில் இறந்தவரின் உடலானது சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தாரிடம் உறுப்புகளை எடுத்த பின் ஒப்படைக்கப்பட்டு விடும்.
உடல் தானம்( body donor):
உடல் தானம் என்பது ஒட்டுமொத்த உடலையும் ஒரு மருத்துவ கல்லூரிக்கு தானமளிப்பது. உடல் தானம் வழங்க தங்களை பதிவு செய்துகொள்பவர் இறக்க நேரிடும்பொழுது, அவர் உடம்பில் நல்ல நிலையில் உள்ள உறுப்புகளை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்துவிட்டு, எஞ்சியிருக்கும் உடலானது அவர் எந்த மருத்துவ கல்லூரிக்கு தன் உடலை தானம் செய்திருக்கிறாரோ அந்த மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும்.
இப்படி ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்ட உடலானது அக்கல்லூரியின் பயிற்சி மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்து பழகுவதற்கு பேருதவியாக இருக்கும்.
இறந்தவரின் உறுப்புகள் மட்டுமல்லாது அவரின் தோலும் தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும்.
நீங்கள் தானம் செய்வதற்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை:
1.உங்களுக்கு உடல் தானமோ அல்லது உடல் உறுப்பு தானமோ செய்ய ஆர்வம் இருப்பின், உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த எண்ணம் குறித்து உங்களின் நெருக்கமான உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கலந்தாலோசியுங்கள்.
2. ஏனெனில், ஒருவரின் இறப்பிற்குப் பிறகு தானம் வழங்கப்பட்ட மருத்துவ கல்லூரிக்கு தகவல் கொடுக்க வேண்டியது இறந்தவரின் உறவினர்களும் நண்பர்களும் தான்.
3. அவர்களின் முழு சம்மதம் பெற்று இந்த நற்காரியத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
உடல் உறுப்பு தானம் எப்படி செய்வது?
உடல் உறுப்புகளை மட்டும் தானம் செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழக அரசாங்கத்தின் உடல் உறுப்பு தானத்திற்கான லிங்கில் உங்களை பதிவு செய்து கொள்ளவும்.
Organ Donation Registration : Click Here
உடல் தானம் எப்படி செய்வது?
முழு உடலையும் தானம் செய்ய விரும்புவோர் உங்கள் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனாட்டமி துறையின் துறை தலைவரை சந்தியுங்கள்.
உங்களுக்கு எச்.ஐ. வி மற்றும் ஹெபடைடிஸ் பி பரிசோதனை செய்யப்பட்டு, உங்களிடம் ஒரு நேர்காணல் நடத்தப்பட்டு இது குறித்த கூடுதல் தகவல்கள் வழங்கப்படும்.
உடல் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அதற்கான அடையாள அட்டை வழங்கப்படும் . அந்த அடையாள அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.
அனைவரின் வாழ்க்கையிலும் இறப்பு தவிர்க்க முடியாதது.
“செத்தும் கொடுத்தான் சீதக்காதி” என்பது போன்று இறப்பிற்குப் பின்னும் பிறருக்கு உதவியாக இருக்க நினைக்கும் அனைவருக்கும் எங்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Related Topics