ஜெய் பீம் !
சமீபத்தில் வெளியாகி பலரை கலங்கச் செய்த ஜெய் பீம் திரைப்படம் சாதி மதம் இனம் கடந்து அனைவராலும் கொண்டாடப்பட்டுவருகிறது.
பழங்குடியினரின் வாழ்வியல் துன்பங்களை கண் முன்னே கொண்டுவந்திருக்கும் இத்திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.
தலித் அரசியல் பேசும் நல்ல தமிழ் படங்களின் வரிசையில் தற்பொழுது சமவெளிகளில் வழும் பழங்குடியினரின் அவல நிலையை எடுத்துச் சொல்லும் படமான ஜெய்பீம் படத்தில் நாம் பார்த்த கதாப்பாத்திரங்கள் உண்மையில் அனுபவித்த அடக்குமுறைகளை அறிய நேரும்பொழுது குலை நடுங்குகிறது.
கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தை அடுத்த முதனை கிராமத்தில் 28 வருடங்களுக்கு முன் வசித்தவர், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராஜாக்கண்ணு.
அவரை நகை காணாமல் போன ஒரு வழக்கில் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று அத்திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி அடித்து துன்புறுத்தியுள்ளனர், போலீசார்.
போலீசாரின் சித்திரவதை தாங்காமல் ராஜாக்கண்ணு லாக்கப்பில் துடிதுடித்து மாண்டிருக்கிறார்.
ராஜாக்கண்ணு அனுபவித்த துன்பங்களை நேரில் பார்த்த அவரின் மனைவி பார்வதிக்கு இன்று வயது 75.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், திரையில் நாம் பார்த்த லாக்கப் வதை காட்சிகள் அனைத்தும் உண்மையில் நிகழ்ந்த கொடுமைகளின் ஒரு சிறுபகுதிதானாம்.
திரைப்படத்தில் ராஜாக்கண்ணுவின் சகோதரியை அரை நிர்வாணப்படுத்துவது போன்ற காட்சிகள் அமைந்திருக்கும்.
உண்மையில், ராஜாக்கண்ணுவின் சகோதரியும் சகோதரி மகனும் முழு நிர்வாணப்படுத்தப்பட்டு சொல்லவியலாத துன்பங்களை அனுபவித்தார்கள் என்கிறார்,பார்வதி.
இரண்டு நாட்கள் விசாரணைக்குப்பின் பார்வதிக்கு( செங்கேனிக்கு) ராஜாக்கண்ணு போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் வந்திருக்கிறது.
தன் கணவர் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பார்வதி அப்போதைய ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தனை உதவிக்காக அணுகியுள்ளார்.
கடலூர் மாவட்ட கம்யூனிஸ்ட் தோழர்களின் பெருமுயற்சியால் சென்னை உயர்நீதிமன்றத்தில்
அப்பொழுது வழக்கறிஞராக பணியாற்றிவந்த நீதியரசர் சந்துருவை இவ்வழக்கில் வாதாடும் படி செய்துள்ளனர்.
நீதியரசர் சந்துரு பல சமூக நீதி வழக்குகளை விசாரித்து வெற்றி கண்டவர்.ராஜாக்கண்ணுவின் வழக்கை Habeas corpus (ஆட்கொணர்வு) மனுவாக அவர் தாக்கல் செய்து,நீண்ட நெடிய சட்டப் போராட்டத்துக்குப் பின் இவ்வழக்கில் மனிதத் தன்மையற்று நடந்து கொண்ட போலீசார் ஐவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத்தந்திருக்கிறார்.
இச்சம்பவம் நிகழ்ந்தது மார்ச் 1993. ஆனால் இன்றுவரை பழங்குடியினர்களின் மேல் சுமத்தப்படும் பொய் வழக்குகள் தொடர்ந்த வண்ணமிருக்கிறது என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.
ராஜாக்கண்ணுவின் வழக்கில் நீதி கிடைக்க போராடிய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தனுக்கு இந்த வழக்கிலிருந்து விலகிக்கொள்ள 25 லட்ச ரூபாய் வரை பேரம் பேசப் பட்டது.
20 வருடங்களுக்கு முன் 25 லட்ச ரூபாய் என்பது சாமானியத் தொகை அல்ல..ஆனாலும் அவர் கடைசி வரை உறுதியுடன் இருந்து இந்த வழக்கில் ராஜாக்கண்ணுவிற்கும், பார்வதிக்கும், பாதிக்கபட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்து விட்டுத்தான் தன் 39 ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
பழங்குடியினர் என்றால் குற்றம்புரிபவர்கள் என்ற பொதுப்புத்தி மாற வேண்டும் என்ற கருத்தை ஜெய் பீம் திரைப்படம் உரக்கச் சொல்லியிருக்கிறது.
அதிகார வர்க்கத்தின் காதுகளுக்கு இது எட்டி இருக்கும் என்று நம்புவோம்.
ஒருவேளை இத்திரைப்படத்தை காணும் எவருக்கேனும் பழங்குடியினர் மீதான கண்ணோட்டம் சிறிதளவு மாறினாலும் அது தான் ராஜாக்கண்ணு போன்ற எளியவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நாம் செய்யும் பிராயச்சித்தமாக அமையும்.
ஜெய் பீம் !